நினைவில் நின்றவள்.. (Super Story)
நினைவில் நின்றவள்...
நான் அவளை மீண்டும் பார்ப்பேன் என நினைத்து கூட
பார்க்கவில்லை...அதுவும் அவளை இப்படி ஒரு சூழலில் சந்திப்பேன் என்று
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.சில விஷயங்கள் எப்பவும் இப்படித்தான் நாம்
நினைக்கும் போது அவை நடப்பதில்லை ஆனால் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத
சந்தர்பத்தில் அவை நிகழ்ந்து விடும். வாழ்வின் சுவாரஸ்யங்களே இவை தான்.....
சில சமயங்களில்
சினிமாக்களையும்,கதைகளையும் விட வாழ்வின் யதார்தங்களில் நாம் நம்பமுடியாத
நிகழ்வுகளை காண நேரிடும். அப்போது நம்மிடம் எச்சங்களாய் மிச்சமிருப்பது....
ஆச்சர்யங்கள் கலந்த மௌனமும்,அதிகப்படியான தடுமாற்றமும் தான்.
ஞாயிற்று
கிழமை ஆதலால் காலையில் கோயிலுக்கு அழைத்து போய்விட்டு என் மனைவியை அவளது
அம்மா வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் என் செல்போன்
சினுங்கியது.குமார் அழைத்து கொண்டிருந்தான்.வண்டியை ஓரமாக நிறுத்தி
விட்டு.அவன் அழைப்பை எடுத்தேன்..,”மச்சான்! என்னடா..எதுவும் அவசரமா...?
நான் அவள கூட்டிட்டு அவ ஆத்தா வீட்டுக்கு போயிட்டிருக்கேன்....ஒரு அஞ்சு
நிமிஷம் கழிச்சு கூப்பிடுறியா...?”
“கொஞ்சம் அவசரந்தான்....சரி நீ போய் அவள விட்டுட்டு உடனே கால் பண்ணு...”என்றான்.
செல்லை பையில் போட்டு விட்டு வண்டியை
எடுத்தேன்.
“என்னங்க போன்ல யாரு..?”இந்த கேள்வியை யார் கேட்டிருப்பார் என சொல்ல வேண்டியதில்லை
“குமார் தாண்டி பேசுனான் ஏதோ அவசரமா(ம்)... அதான் ஒண்ணைய உங்க ஆத்தா வீட்டுல விட்டுட்டு கூப்புடுறேன் சொன்னேன்..”
“ஏன்! மாமியார் வீடுன்னு சொல்ல கூடாதா...அது என்ன ’எங்க ஆத்தாவீடு’ன்னு சொல்றீங்க...உங்களுக்கு எப்பவும் இப்படித்தான்...”
“மாமியார்
வீடுன்னா....போலிஸ்
ஸ்டேஷ்ன்னு அர்த்தம்மா... அதான் அப்படி சொன்னேன்....”மழுப்பி
பார்த்தேன்...எப்படித்தான் இப்படி ஒவ்வொரு வார்த்தையிலையும் தப்பு கண்டு
பிடிக்கிறாள்களோ!
“இந்த வாய் மட்டும் இல்லைனா நாம எதுக்கு தான் ஆவோமோ... நேரா பார்த்து வண்டிய ஓட்டுங்க...?”
நல்லவேளையாக அவ ஆத்...இல்ல எங்க மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.அவள் இறங்கியவுடன் செல்போனை எடுத்து குமாருக்கு கால்
செய்தேன்.
“வீட்டுக்குள்ள கூட வராம அதுக்குள்ள என்ன அவசரம்...”
“இல்லடீ அவன் தான் அவசரம்ன்னு சொன்னான்...”
“அவசரம்ன்னா
கூட நீங்கதான் கால் பண்ணனுமா...ஏன் இப்ப கூட உங்க ஃப்ரண்டு
கூப்பிடமாட்டாரோ... நல்லா வந்து சேந்திருக்காங்கலே...”எந்த வஞ்சகமும்
இல்லாம என்ன வையிற மாதிரியே அவனையும் வஞ்சா....சமீபத்துல வந்த படத்துல ஒரு
டயலாக் வருமே அதே மாதிரி சொல்லனும்னா....’பட்!
அவளோட இந்த நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது’.
இந்த களோபரத்துக்குள் குமார் லைனுக்கு வந்துவிட்டான்.
“என்னடா! என் தங்கச்சிக்கிட்ட ஏதோ வாங்கி கெட்டுற போல...”
“ஆங்! எல்லாம் உன் பெருமைய பத்திதான் பேசிக்கிட்டிருந்தோம்...சரி அத விடு ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னியே...”
“மச்சான்...ஒண்ணுமில்லடா...உன் ரத்தம் என்ன குரூப்....”
“ஏண்டா! ரத்த காட்டேரி
எதுக்குடா கேக்குற...யாருக்கும் அவசரமா தேவப்படுதா..? நான் ஓ பாஸிடிவ்டா”
“டேய்
B பாஸிடிவ் பிளட் அவசரமா வேணும்டா...யாருக்குன்னு தெரியல நம்ம 'BLOOD'
ராஜாதான் போன் பண்ணி சொன்னான்.ஏதோ ரொம்ப அவசரமாம்... G.H-க்கு
போகணுமாம்...”
“நான் UNIVERSAL DONOR தானடா..அதுவும் இல்லாம அது ஒண்ணும் RARE GROUP இல்லையேடா...”
“அதெல்லாம் சரிதான்... ஆனா ஆப்ரேஷன் அப்ப முதல்ல FRESH BLOOD ஏத்திட்டு பிறகுதான் COLLECTED BLOOD-ஓ
அல்லது ஒண்ண மாதிரி DONOR BLOOD-ஓ தேவப்பட்டா ஏத்துவாங்களாம்....சரி இப்ப உனக்கு தெரிஞ்சவங்க B-positive யாரும் இருக்காங்களா...”
“மச்சான்! என் தம்பி B-positive தாண்டா...”
“நல்லதா போச்சு சரி அவன உடனே கூட்டிட்டு GH-வந்திடு... நானும் வந்திடுறேன்”
“சரிடா! இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுறோம்...”அவனது காலை
துண்டித்துவிட்டு என் தம்பிக்கு போன்போட்டு அவனிடம் விஷயத்தை சொல்லி அவனை
GH-க்கு
வரச் சொல்லிவிட்டு....என் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி விட்டு நானும்
விரைந்தேன். நிற்க.
அப்போது கூட எனக்கு அவளது நினைவுகள்
வரவில்லை.ஏனென்றால் நான் இத்தனை ஆண்டுகளில் அவளை கிட்ட தட்ட மறந்து
விட்டிருந்தேன் என்பதே என் மனம் இப்போதும் ஏற்க மறுக்கும் உண்மை.
அவ்வளவு ஏன் ரத்தம் தேவைபடுபவர் ஆணா...?பெண்ணா..? என்று கூட தெரியாத நிலையில் அவளுக்கு தான் ரத்தம் கொடுக்க
போகிறோம் என்பதை அப்போது நான் அறிந்திருக்க கொஞ்சமும் ஞாயமில்லைதான்.
ஆனாலும்
ஏதோ ஒன்று என்னுள் உந்துகிறது.என்னையும் அறியாமல் நான்
பதைக்கிறேன்.கொஞ்சம் படபடப்பாகவும் உணர்கிறேன்.அதற்கான காரணமும்
புரியவில்லை.உண்மைதான்.அந்த எனது பதபதைப்பையும்,துடிதுடிப்பையும் இப்போது
நினைத்து பார்க்கும் போது தான் தெரிகிறது என்னையும் அறியாமல் ஏதோ ஒரு
உள்ளுணர்வால் அந்த
நாளுக்கான சிறப்பை நான் உணர்ந்துவிட்டிருந்தேன் என்று.
இந்த
தவிப்புகளுக்கிடையில் ஒருவழியாக GH-க்கு வந்து சேர்ந்தேன். குமார்
எங்களுக்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.சொல்லி வைத்தாற் போல் என்
தம்பியும் வந்து சேர்ந்தான்.
“அண்ணே! யாருக்கு அடி பட்டிருக்கு....என்ன பிரச்சனை....இவன் வேற உடனே கிளம்பிவான்னு மொட்டையா சொல்லிட்டான்”என்று என்னை சுட்டியபடி
குமாரிடம் கேட்டான் என் தம்பி.
“ஏதோ ஒரு பொம்பளக்கி மண்டையில
சரியான அடி போல...மாடி படி இறங்கும் போது வழுக்கி கீழ
விழுந்திருச்சாம்...”என்று விளக்கியபடி எங்களை ரத்தம் பரிசோதிக்கும்
இடத்திற்கு அழைத்து போனான். என் தம்பியின் ரத்தம்
பரிசோதிக்கப்பட்டு....ரத்தம் எடுக்கப்பட்டது.ரத்தம் கொடுத்து முடிந்தவுடன்
அவனுக்கு குடிப்பதற்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டது.அவன்
தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட பிறகு....
”அண்ணே! பேஷண்டை பார்த்திட்டு போயிடலாமா...?” என குமாரிடம் கேட்டான்.எனக்கும் அப்படி தோன்றியதால்,”என்னடா!மாப்ள பாத்திருலாம்ல...”
“அதுக்கு
என்னடா வாங்க...” என்று அழைத்து சென்றான்....ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு
செய்வதால் ICU-வில் இருப்பதாக சொன்னான்.அந்த கணம் வரை கூட அவளது நினைவுகள்
எனக்கு வரவில்லை.எங்களை ICU-பக்கத்தில் நிற்க வைத்து
விட்டு அருகிலிருந்த நர்ஸிடம் விஷயத்தை சொல்லி அனுமதி கேட்டான்.அவள்
மிகுந்த தயக்கத்திற்கு பிறகு...”இரண்டு நிமிஷ்ம் தான்...இரண்டு பேர்
மட்டும் போங்க...” என்று அனுமதித்தாள்.
நானும்,என் தம்பியும் உள்ளே சென்றோம்.....
அவளை...அவளை.... நான் அங்கே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை....அதுவும்
இந்த நிலையில்.....என் பள்ளிப் பருவத்தில் நான் பற்றிய அந்த கரங்களா
இப்படி....என்
கன்னங்களையும்,நெற்றியையும் ஈரமாக்கிய இதழ்களா இப்படி...உலர்ந்து
போயிருக்கின்றது....ஒளி பொருந்திய
அந்த கண்களா இன்று இருளடைந்து
போயுள்ளது.....அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை.என்
நிலையுணர்ந்தவனாய் என் தம்பி,”வா...போலாம்...” என்றான்.
கதவை திறந்து வெளியில் வந்தோம்,வெக்கை முகத்தில் அப்பியது.என் நண்பனின் தோள் பற்றினேன்,”மச்சான்!தம்பி இரத்தம்
கொடுத்தது யாருக்கு தெரியுமாடா...”
“யாருடா....” குமார்
“டேய் மச்சான்! அது எங்க ஸ்கூல் ஆயாடா...”
No comments:
Post a Comment