Tuesday 28 February 2012

மிஸ்ட் கால்..

கல்பனாவின் எண்ணுக்கு அந்த மிஸ்ட் கால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தாள். ஊஹூம் யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. சரி யாராய் இருக்கும் என கூப்பிட்டுப் பார்ப்போமே என்று அந்த எண்ணை அழைத்தாள்.
“உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்துது” சுகந்தி சொன்னாள்.
“ஓ.. ஹாய்… நீங்க கல்பனா தானே ?” மறுமுனையில் ஒரு வசீகரிக்கும் ஆண் குரல். அந்தக் குரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி சொன்னாள்.
“இல்லீங்க… இது ராங் நம்பர்…..”
“ஓ… ஐ யாம் சாரி இந்த நம்பர் தான் குடுத்தாங்க… ” மறுமுனையில் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“சாரிங்க.. இது ராங் நம்பர்…” சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி. அந்த நிகழ்ச்சியை அத்தோடு மறந்தும் போய்விட்டாள்.
நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு. அழைத்தது அவனே தான்.“கல்பனா இருக்காங்களா ? “ அதே குரல் !
“இல்லீங்க, மறுபடியும் நீங்க தப்பான நம்பருக்கு கூப்பிட்டுட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன நம்பர் வேணும் ?” சுகந்தி கேட்டாள்.
அவன் சொன்னான் !
ஐயோ.. இது எங்க வீட்டு நம்பர். நீங்க தப்பா நோட் பண்ணியிருப்பீங்க… முதல்ல போய் சரியான நம்பரை வாங்கிக்கோங்க ” சுகந்தி சொன்னாள்.
“அதான் என்னோட பிரச்சினையே ! தப்பா நினைச்சுக்காதீங்க. நான் அண்ணா யூனிவர்சிடி ல பி.ஹெச்.டி பண்ணிட்டிருக்கேங்க. சில தகவல்களைத் தேடி அலையறேன். கிடைக்கவே இல்லை. கல்பனா கிட்டே அந்த தகவல்கள் இருக்குன்னு சொன்னாங்க. யூனிவர்சிடில அவங்க நம்பர்ன்னு இதைத் தான் குடுத்தாங்க… எப்படின்னு தெரியல…” மறுமுனையில் அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது.
அண்ணா யூனிவர்சிடி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு. இவளும் எம்.பில் முடித்துக் கொண்டு ஆராய்ச்சி பண்ண வேண்டும் எனும் ஆர்வத்தில் இருப்பவள் தான். “ஓ.. என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார் ?” சுகந்தி கேட்டாள்.
என்னை நீங்க விஜய்ன்னே கூப்பிடலாம். சார் ன்னு கூப்பிடற அளவுக்கு இன்னும் வயசாகலை எனக்கு “ மறு முனையில் விஜய் சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான்.
“நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க”
ஓ..ரியலி.. நான் கூட அதே ஏரியால தான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்” சுகந்தி சொன்னாள்.
“ஓ.. நீங்க கூட ஸ்டுடண்டா ? வாவ்… இஃப் யூ டோண்ட் மைண்ட்…. எனக்கு கொஞ்சம் தகவல்கள் கொடுக்க முடியுமா ?” விஜய் கேட்டான்.
“தகவல்ன்னு சொன்னா….” சுகந்தி இழுத்தாள்.
“உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வெச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க… ஏதோ இந்த போனா போவுதுன்னு ரெண்டு மூணு தகவல் குடுத்தீங்கன்னா கூட போதும்” அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள்.
“நீங்க எங்கே தங்கியிருக்கீங்க ?” சுகந்தி கேட்டாள்.
நான் சிஸ் மெரிடியன், வேளச்சேரி “ விஜய் சொல்ல சுகந்தி ஆச்சரியமானாள். அவளும் அதே தெருவில் இருக்கும் காஸா பிளாங்கா அப்பார்ட்மெண்டில் தான் இருந்தாள்.
இருவரும் சில நாட்களுக்குப் பின் ரத்னா கஃபேவில் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் பழக்கம் முதலில் ஆரோக்கியமான கல்வியில் ஆரம்பித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தளம் மாறியது !
“என்ன மேடம், ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டு அப்பா அம்மாவை அறிமுகப் படுத்த மாட்டேங்கறீங்க, ஒரு கப் காபி தரமாட்டேங்கறீங்க ?” விஜய் சீண்டினான்.
“காபி வேணும்ன்னா இன்னிக்கே வாங்க…” சுகந்தி விஜயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
வீட்டில் அவர்களைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குப் பிடித்தவருடனான மாலைப் பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது. நெருக்கமும், இணக்கமும் அவர்களை எல்லை தாண்ட வைத்தது. முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம் பின்னர் அடிக்கடி நடந்தது !
திடீரென ஒருநாள் விஜய் காணாமல் போய்விட்டான் ! அவனுடைய செல்போன் நம்பரை அழைத்தால், அது உபயோகத்தில் இல்லை என்றது. சுகந்திக்குப் பதட்டம் அதிகரித்தது. அவனுடைய அப்பார்ட்மெண்டில் சென்று விசாரித்தால் அப்படி யாரும் அங்கே இருந்திருக்கவில்லை. யூனிவர்சிட்டியில் தெரிந்த நபர்கள் மூலமாக விசாரித்தால் அங்கும் அவனைப் பற்றிய தடயங்கள் ஏதும் இருக்கவில்லை.
உட்கார்ந்து யோசித்தவளுக்குத் தான் விஷயம் புரிய ஆரம்பித்தது. ஒரு ராங் நம்பரில் ஆரம்பித்தவர் ராங் நபர் என்பது அவளுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறான். இவளுடைய குடும்பம் பற்றியும், படிப்பு பற்றியும், ரசனை பற்றியும் எல்லாம் தெரிந்து கொண்டே அவளை வலையில் வீழ்த்தியிருக்கிறான். சுகந்திக்கு அவமானமாய் இருந்தது.  கடுமையான ஏமாற்றம் மன உளைச்சல் என உழன்ற சுகந்தி வாழ்க்கையைப் புரிந்து கொண்டபோது ரொம்ப தாமதமாகியிருந்தது.
இது ஏதோ ஒரு சுகந்திக்கு நடந்த கதையல்ல. நகரின் பல இடங்களிலும் பல வகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே. சைபர் கிரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன.
மிஸ்ட் கால், ராங் நம்பர்  போன்றவையெல்லாம் ஒரு தூண்டில் என்பதை பலரும் யோசித்துக் கூட பார்ப்பதில்லை. யாரோ அழைத்திருக்கிறார்களே ஏதாவது முக்கியமான சமாச்சாரமோ ? என திரும்ப அழைத்தால் போச்சு ! பேசிப் பேசி வசீகரித்து ஏமாற்றி விட மறு முனை காத்துக் கொண்டிருக்கிறது !
தெரியாத எண்ணிலிருந்து மிஸ்ட் கால் வந்தால் அந்த எண்ணுக்குத் திரும்ப அழைக்காமல் இருப்பது தான் உசிதம். ஒருவேளை அழைத்தவர் ஏதேனும் முக்கியமான தகவல் சொல்லவேண்டுமென்றால் மீண்டும் அழைப்பார் என காத்திருப்பது தான் நல்லது. பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் உங்கள் கணவரிடமோ, அப்பாவிடமோ கொடுத்து பேசச் சொல்லுங்கள்,
“ஓ… அப்படியா ? என் நம்பர்ல இருந்து மிஸ்ட் கால் வந்திருந்ததா ? இருக்காதே …” என பார்ட்டி எஸ்கேப் ஆகி விடுவார்.
வீட்டு எண்ணுக்குக் அழைப்புகள் வருவதிலும் பல கொக்கிகள் உண்டு. வீட்டில் ஆள் இருக்கிறார்களா ? வெளியே எங்கேயாவது போயிருக்கிறார்களா என்பதைக் கவனிக்கவும் போன் செய்வார்கள். உங்கள் கவனத்தைத் திசை திருப்பி வீட்டுக்குள் நுழைய முயலவும் போன் செய்வார்கள். உஷாராய் இருங்கள்.
ஆர்குட், ஃபேஸ் புக் போன்ற இணைய தளங்களில் சகட்டு மேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு. அந்தப் படங்களைப் பார்த்து, எண்ணைப் பார்த்து உங்களுக்கு மிஸ்ட் கால் பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அந்த புகைப்படங்களை எடுத்து இணைய தளங்களில் போட்டு உங்கள் பெயருக்குக் களங்கள் விளைவிக்கவும் முயல்வார்கள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இத்தகைய செய்திகளை விளக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
உங்கள் மொபைல் எண்களை கடைகளில் சர்வீஸுக்குக் கொடுக்கும் போது தெரியாத இடங்களில் கொடுக்காதீர்கள்.  உங்கள் செல்போனிலுள்ள தகவல்கள் பிரதி எடுக்கப்படலாம். உங்களுடைய மொலைலில் இருந்து நீங்கள் அழித்து விட்ட தகவல்களைக் கூட மீண்டெடுக்க மென்பொருட்கள் உண்டு என்பதை மறக்காதீர்கள். அதே போல புளூடூத் எப்போதும் இயக்க நிலையில் இருப்பதும் சிக்கலானதே.
இன்னொரு விஷயம், உங்களுக்கு மின்னஞ்சலிலோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ, இணைய தளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள். இது சிக்கலை நீங்களே போய் காசு கொடுத்து வாங்கி வருவதற்குச் சமம்.
மிஸ்ட் கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ்.எம்.எஸ். முதலில் “குட் நைட்” என்று ஒரு எஸ் எம் எஸ் வரும். “ யாரது ? “ என்று நீங்கள் திரும்பி எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்ட்டில் சேர்ந்து விடுவீர்கள். பின் சிக்கல்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். சைலண்டாக விட்டு விட்டால் தப்பிக்கலாம்.

--
so plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz takecare........

No comments:

Post a Comment