Friday, 26 April 2013

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான். அவள் பெற்றோரும் அப்படித் தான். மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர்... 

தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது... 

நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது... 

தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள். அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..? 

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்...

எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர்...

உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்...

அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்ப்பட்டு போயிருந்தாள். நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள்...

திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம். அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர்...!

Tuesday, 2 April 2013


தாயிடம்........................அன்பாக................பேசுங்கள்..!

தந்தையுடன்..................பண்பாக................பேசுங்கள்..!

ஆசிரியரிடம்.................அடக்கமாக............பேசுங்கள்..!

துணைவியுடன்.............உண்மையாக........பேசுங்கள்..!

சகோதரனிடம்..............அளவாக.................பேசுங்கள்..!

சகோதரியிடம்...............பாசத்தோடு...........பேசுங்கள்..!

குழந்தைகளிடம்...........ஆர்வத்தோடு.........பேசுங்கள்..!

உறவினர்களிடம்..........பரிவோடு...............பேசுங்கள்..!

நண்பர்களிடம்..............உரிமையோடு.........பேசுங்கள்..!

அதிகாரியிடம்..............பணிவோடு.............பேசுங்கள்..!

வியாபாரியிடம்............கறாராக..................பேசுங்கள்..!

வாடிக்கையாளரிடம்....நேர்மையாக...........பேசுங்கள்..!

தொழிலாளரிடம்..........மனிதநேயத்தோடு..பேசுங்கள்..!

அரசியல்வாதியிடம்.....ஜாக்கிரதையாக.....பேசுங்கள்..!

இறைவனிடம்..............மெளனமாக............பேசுங்கள்..!

Sunday, 25 November 2012

எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது. 
எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்! 
உன் வீட்டின் செல்ல மகாராணியாய் நான். என் அப்பா அம்மாவின் செல்ல பிள்ளையாய் நீ என ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் வீட்டில் செய்த விளையாட்டுக்கு அளவெங்கே? 
உன் அம்மாவின் மடியில் தலைவைத்து தூங்கும் போது வெளியில் பொறாமைபடுவதாக நீ காட்டிக்கொண்டாலும் அதை ரசித்தாய் என்பது எனக்கு தெரியும் உன் கண்ணாடியாய் நான்! 
என் ஒருவரி சொல்லை வைத்து நான் நினைத்ததையும் நினைக்க போவதையும் சொல்லிவிடும் என் மனசாட்சியாய் நீ! 
ஒளிவு மறைவென்பது நம் அகராதியில் எங்கேயிருந்தது? ஒருவருக்கொருவர் டைரியாய் நாம்! 
உன் பிடிவாதத்தை ரசிக்கும் திறன் உனக்கு மட்டுமே தெரியும். எதுவெல்லாம் என் குறை என சொல்வேனோ அவையெல்லாம் ரசிக்கிறாய். எவையெல்லாம் என் சிறப்பு என பெருமைப்பட்டுக்கொள்வேனோ அவையெல்லாவற்றையும் மட்டம் தட்டி என் கோபத்தை தூண்டுவாய்! 
பருவ வயதில் நம் நட்பு அடுத்த பரிமாணமாய் காதலை நோக்கி பயணிக்க எத்தனித்த போது நட்பு மட்டுமே நம்மை கடைசிவரை ஒன்றிணைக்கும் என்று முடிவெடுத்ததால் சலன பாதையை எளிதாகவே கடந்துவிட்டோம். பேசி தீர்க்க முடியாத பிரச்சனை உலகில் இல்லை என நீ அடிக்கடி சொல்வதன் அர்த்தம் அன்றுதான் தெரிந்தது! மனதிலேயே பூட்டியிருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்றும் சாகாமல் சாகும் வித்தையை இருவரும் கண்டிருப்போம்! 
பாடம் சொல்லிகொடுக்க அம்மா ஏற்பாடு செய்த பீஸ் வாங்காத டியூசன் மாஸ்ட்டர் நீ! அன்றைய நாளின் என் மேல் உள்ள உன் கோபத்தை என் தலையில் அடித்து தீர்த்துக்கொள்ளும் "2 மணி நேர எதிரி" நீ! காலேஜ்க்கு என்னை அழைத்துச்செல்லும் டூவீலர் ட்ரைவர் நீ? யார்யாரெல்லாம் என்னை சுற்றி இருக்க வேண்டுமென தீர்மானித்த என் பாதுகாவலன் நீ! 
நீ என்ன மார்க்கெட்டில் இருக்கும் கத்திரிக்காயா? அதை நினைத்ததும் வாங்கி விட முடியும்! நீ மண்ணில் இருக்கும் வைரம்! உன்னுடன் பழகுவது அனைவருக்கும் எளிதான விஷயமாய் இருக்க கூடாது... நிறைய பேர் ஏங்க வேண்டும், தகுதியானவருக்கு மட்டுமே நட்பு கிடைக்க வேண்டும் என மொக்கையான தத்துவத்தில் என் தனித்தன்மையை காத்தவன் நீ! :-) 
நம்மை ஒரு சேர பார்க்கும் யாவருக்கும் வரும் சந்தேகப்பார்வை சர்வசாதாரணமானது. அது தெரிந்தும் "நமக்கென்ன?" என என் கைபிடித்து இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து போவாய்... புன்னகையுடன் நான் "அதானே??!!"


 கண்ணீரை இறக்கியது! சிறு சிறு விஷயங்களால் பெரிய பெரிய ஆச்சர்யங்களை தருபவன் நீ..... மறுபிறவி எடுத்து வந்த பெண் முதலில் பார்க்க நினைப்பது குழந்தையையும் கணவனையும் தான் என்பதை எப்படி தெரியும் உனக்கு? நீ வீட்டுக்கு வந்தாலே காதில் பஞ்சடைத்துக்கொள்ள தோணும். உன் மருமகனின் உடலில் காணும் கொசு கடித்த ஒவ்வொரு சிவப்பு புள்ளிக்கும் 100 வார்த்தைகள் வசைகளாக எனக்கு கிடைக்கும்! கைகளால் முடியாததை வார்த்தைகளில் காட்டுவாய் என தெரியும். என் மடியில் அவன் இருந்த நாட்களை விட உன் தோள்களில் இருந்த நாட்களே அதிகம். என் கைபிடித்து அவன் நடந்த நாட்களை விட உன் பைக்கில் ஊர் சுற்றிய நாட்கள் அதிகம். என் மகனாய் பிறந்ததால் அவனுக்கும் உன் விலைமதிப்பில்லாத அன்பு கிடைத்துவிட்டது! அவனும் அதிஷ்ட்டசாலிக்கெல்லாம் அதிஷ்ட்டசாலி... இரத்த சம்மந்தமே இல்லாமல் நட்பினால் இணைந்த நம் உறவு என்னும் அற்புத பொக்கிஷம் இதோ அடுத்த தலைமுறையும் எடுத்துக்கொண்டது... நம் குழந்தைகளும் நண்பர்களாக! மனம் முழுவதும் சந்தோஷங்கள் பரவ உன் தோளில் தலை சாய்த்து நம் குழந்தைகளின் விளையாட்டுக்களை ரசித்துக்கொண்டிருக்கிறேன் "அம்மா...அம்மா.... எந்திரி! எனக்கு காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சு!"-மகன் எழுப்புகிறான். அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்...

Sunday, 4 November 2012

நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை... 

மனம் உடையும் போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை... 

தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை... 

அது வேறு யார் கையும் அல்ல, உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை... 

அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே...!



படித்ததில் பிடித்தது
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். 
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!” 

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என
்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!

Saturday, 15 September 2012

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி

Sunday, 19 August 2012

Kaarasaaram: Journey of the Biryani

Kaarasaaram: Journey of the Biryani: Hello Biryani Lovers... I have a big soft corner for biryani.... and my tummy expands a little bit more at the sight, smell and taste of...

Friday, 4 May 2012


கடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான். அகப்பட்ட சிலவற்றை இங்கே தருகிறேன்.நமக்காக சொன்னதல்ல, வேறு யாருக்காகவோ சொன்னவை என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.
  • எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.
  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.

  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.

  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!

  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.

  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).

  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).

  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).

  • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).

  • மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.

  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

  • படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.

  • பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.

  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.

  • அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.

  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

  • கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.

  • அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.

  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.

  • நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.

  • புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களைவிட்டொழிப்பது தான் கஷ்டம்.

  • உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.

காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.