- எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.
- எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.
- வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.
- நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!
- நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.
- ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).
- உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).
- எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).
- எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).
- மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.
- எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.
- படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.
- பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.
- கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.
- அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.
- ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.
- கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.
- அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.
- உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.
- நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.
- புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களைவிட்டொழிப்பது தான் கஷ்டம்.
- உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.
காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.
No comments:
Post a Comment